Golden Quotes of Periyava

“சுவாமி, இன்னிக்கு ஏகாதசி. நான் பச்சைத் தண்ணிகூட குடிக்கமாட்டேன்

01/03/2018

சுவாமி, இன்னிக்கு ஏகாதசி. நான் பச்சைத் தண்ணிகூட குடிக்கமாட்டேன். அதனால நான் சாப்பிடலையேன்னு நீங்க வருத்தப்படாதீங்க!” பெரியவாளிடம் ஒரு சாமான்யன்

“ஒரு சாமான்யன் நிர்ஜலமா உபவாசம் இருக்கான். சன்யாசி நான் பால் குடிச்சுண்டு இருக்கேனே. இது தப்பில்லையோ..!” -(தொடர்ந்து நிர்ஜல உபவாசம் அனுஷ்டித்த பெரியவா)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-18-05-2017 தேதியிட்ட குமுதம் பக்தி

ஏகாதசி விரதம் இருக்கிற சமயத்துல பால்.மோர் இப்படி உப்புப் போடாத நீர் ஆகாரத்தை ரொம்ப கொஞ்சமா எடுத்துக்கலாம் அப்படிங்கறது விரத விதியிலேயே இருக்கு. அதனால, விரதம் இருக்கிற அன்னிக்கு கொஞ்சமா பால் மட்டும் ஒரே ஒருதரம் எடுத்துப்பார் பரமாசார்யா.

ஒரு சம்யம் அவர் முகாமிட்டிருந்த இடத்துல மின்சாரம் பழுது பார்த்திண்டிருந்தார் மகாராஷ்ட்ரா ஆசாமி ஒருத்தர். அன்னிக்கும் ஏகாதசிதான். கார்த்தால வேலையை ஆரம்பிச்சவர் உச்சிப்பொழுது நெருங்கியும் அப்படி இப்படி நகரவே இல்லை. எல்லாத்தையும் கவனிச்சுண்டு இருந்த பெரியவா, ” அந்த ஆசாமி பாவம்.எதுவுமே சாப்டாம வேலை பார்த்துண்டு இருக்கான். சாப்டு வந்து வேலை செய்யச் சொல்லு” அப்படின்னு பக்கத்தில இருந்த சீடன்கிட்டே சொன்னார்.

அதைக் கேட்டுண்டு இருந்த அந்த ஆசாமி,

“சுவாமி, இன்னிக்கு ஏகாதசி. நான் பச்சைத் தண்ணிகூட குடிக்கமாட்டேன். அதனால நான் சாப்பிடலையேன்னு நீங்க வருத்தப்படாதீங்க!” அப்படின்னு சொன்னான்.

அதைக் கேட்டாரோ இல்லையோ,உடனே பதறிட்டார் பரமாசார்யா.

“ஒரு சாமான்யன் நிர்ஜலமா உபவாசம் இருக்கான் . சன்யாசி நான் பால் குடிச்சுண்டு இருக்கேனே. இது தப்பில்லையோ..!” அப்படின்னு சொல்லிட்டு அன்னிலேர்ந்து ஏகாதசி அன்னிக்கு கொஞ்சம் பால் குடிச்சுண்டு இருந்தாரே, அதையும் நிறுத்திட்டு நிர்ஜல உபவாசத்தை அனுஷ்டிக்க ஆரம்பிச்சுட்டார் பெரியவா.

அதுவும் எப்படித் தெரியுமா?

ஏகாதசி அன்னிக்கு நிர்ஜல உபவாசம்.மறுநாள் பாரணை பண்ணணும் இல்லையா? சாஸ்திரப்படி துவாதசி அன்னிக்கு ஸ்ரவண நட்சத்திரம் அமைஞ்சுட்டா அன்னிக்கும் துளி ஜலம் கூடக் குடிக்கக் கூடாது. அதனால அன்னிக்கும் உபவாசத்தைத் தொடர்வார் மகாபெரியவா. மறுநாள் பிரதோஷம். அன்னிக்கு பகல்ல சாப்டக்கூடாது. சாயந்திரம் சிவபூஜை ஆனப்புறம்தான் சாப்டலாம். அதேசம்யம் பிரதோஷம் ஞாயித்துக்கிழமைல அமைஞ்சுட்டா, சூரியன் அஸ்தமிச்சப்புறம் சாப்டக் கூடாது. அதனால அன்னிக்கும் உபவாசம்தான். நாலாவது நாள் மாச சிவராத்ரி. அதனால அன்னிக்கும் உபவாசம்.

ஆக, தொடர்ந்து நாலுநாள் ஒரு சொட்டு ஜலம்கூட அருந்தாம விரதம் அனுஷ்டிப்பார் பரமாசார்யா.

ஒரு சமயம் அவர் இப்படி விரதம் அனுஷ்டிக்கறதைப் பார்த்துட்டு “இத்தனை கடுமையா விரதம் இருக்கேளே பெரியவா? இப்படி உடம்பை வருத்திக்கறது அவஸ்யமா?” அப்படின்னு கேட்டார் சீடர் ஒருத்தர்.

அதற்கு பரமாசார்யா என்ன சொன்னார் தெரியுமா?

“இத்தனை ஆசாரத்தை அனுஷ்டானத்தைக் கடைப்பிடிச்சும் வேளா வேளைக்குப் பசியெடுக்காத நிலை எனக்கு இன்னும் வரலயே” அப்படின்னுதான்.

லோகத்துக்கெல்லாம் படியளக்கற பரமேஸ்வரனே பசி தாங்கமுடியாம அன்னபூரணிகிட்டே பிட்சை எடுத்ததா புராணம் சொல்றது. ஆனா, பரமாசார்யா, அந்த அன்னபூரணி தானாவே வந்து அன்னமிடறேன்னு சொன்னாக்கூட வேண்டாம்னுட்டு உபவாசம் இருக்கிறதுக்கு ஆசைப்பட்டார்ங்கறச்சே அவரோட பெருமையை என்னன்னு சொல்றது?




← Back to Golden Quotes of Periyava